திங்கள், 6 அக்டோபர், 2014

மாயமாய் மறைவது எப்படி

  
ஒருவரை நாம் கண்டே பிடிக்க முடியாவிடில், அவன் மாயமாய் மறைந்து விட்டான் என உவமையாகச் சொல்வது வழக்கம். மற்றபடி நமது புராணக் கதைகளின் ஊடே ஒரு இடத்தில் இருந்து சட்டென மறைந்து வேறு இடத்தில் தோன்றுதல் போன்ற பல குறிப்புகளை காண முடிகிறது.

நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா?

சாத்தியமே என்கிறார் அகத்தியர். "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இது பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. ஆமாம்.. நினைத்த மாத்திரத்தில் நமது உருவத்தை மறைத்துக் கொள்ள உதவிடும் அஞ்சன மை ஒன்றைப் பற்றி கூறியிருக்கிறார்.

அதை எப்படி தயார் செய்வது?

சித்தியுள்ள அஞ்சனந்தா னொன்றுகேளு
    திறமான தேவாங்கு காமரூபி
பத்தியுள்ள கருக்குருவி மூன்றின்பிச்சும்
    பாலகனே ஒன்றாக கருக்கிக் கொள்ளு
சுத்தமுள்ள முட்டோட்டி லிட்டுக்கொண்டு
   சூதுகப டில்லாமல் வருக்கும்போது
பத்தியுடன் தானுருகி மையாய்நிற்கும்
   மார்க்கமுடன் கல்வமதில் வைத்துக்காணே


காணவே பேரண்டத் தயிலம்விட்டு
   கடைந்தெடுக்கும் போதிலிருக் கண்ணிற்காணும்
ஊணவே ஓம்கிலிரங்ரங் கென்றேதான்
   உத்தமனே தான்செபித்து வழித்துக்கொண்டு
பேணவே மதகரியின் கொம்பில்வைத்து
   பிலமான சிமிழதனைப் பதனம்பண்ணி
பண்ணியந்த மையெடுத்துத் திலதம்போட்டு
   கண்ணிறைந்த காட்சியிலே நின்றால்மைந்தா


காசினியி லுனதுருவைக் காணமாட்டார்
   புண்ணியனே மனதுகந்த யிடத்தில்நின்று
போதமுடன் ஞானநெறி தன்னைப் பாரு
   தன்னருளைத் தனதாகப் பார்த்துப்பின்பு
சங்கையுடன் திலதமதை யெடுத்துப்பாரே
   என்னசொல்வேன் உனதுரு கண்ணிற்காணும்

தேவாங்கு, காமரூபி, கருக்குருவி ஆகியவற்றின் பிச்சுக்களை ஒன்றாக எடுத்து கருக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சுத்தமான முட்டை ஓட்டில் சேகரித்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அப்போது அவை உருகி மை போலாகி இருக்கும் என்கிறார் அகத்தியர். இந்த மையை கல்வத்தில் இட்டு பேரண்டத் தயிலம் சேர்த்து கடைய வேண்டுமாம். 

கடைந்த பின் அதனை வழித்து எடுத்து, யானைத் தந்ததால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இப்படி சேகரம் செய்யும் போது "ஓம் கிலி ரங் ரங்" என்ற மந்திரத்தினை செபித்துக் கொண்டே செய்திட வேண்டுமாம்.

உருவத்தை மறைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து திலகமாக இட்டுக் கொள்ள உலகில் உள்ள யாரும் உருவத்தைக் காணமுடியாது என்கிறார். பின்னர் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று யோகம் தவம் போன்றன செய்து தன்னை அறிந்து கொள்ள கூறுகிறார். இந்த திலகத்தை அழித்து விட்டால் உருவம் பிறர் கண்களுக்குத் தென்படத் தொடங்கிவிடும் என்கிறார். 

இது ஒரு தகவல் பகிர்வே, இதன் சாத்திய அசாத்தியங்கள் விவாதத்திற்கும் மேலதிக ஆய்வுகளுக்கும் உட்பட்டவை.


                                    பகிர்வில் ர.சடகோபால்.BA 

கருத்துகள் இல்லை: