வெள்ளி, 10 அக்டோபர், 2014

சுடலை மாடன்



சுடுகாட்டில் வாழும் தெய்வம் என்பதால் “சுடலை” என்றும் மாட்டை வாகனமாகக் கொண்டதால் “மாடன்" என்றும் வழங்கி, அவ்விரண்டும் இணைந்து “சுடலைமாடன்” என்ற பெயர் உருவானது. சிவனை சுடலை எனவும், சுடலைமாடன் எனவும் குறிப்பிடுவதுண்டு. சுடலைமாடனை சிவ அம்சமாகவே சைவர்கள் பார்க்கின்றார்கள்.

                  

பார்வதி சிவனிடம் “தனக்கு ஆண்பிள்ளை வரம் வேண்டும்” என்று கேட்கின்றாள். சிவன் கைலாயத்தில் உள்ள முப்பத்தி இரண்டாம் தூணில் எரிகின்ற மணிவிளக்குகளில் முந்தானையை ஏந்தி நிற்குமாறு கூறுகிறான். அவ்வாறே பார்வதியும் விளக்கின் கீழ் முந்தானை ஏந்தி நிற்க, பரமசிவன் அந்த விளக்கின் சுடரை தூண்டிவிட முந்தானையில் அந்தச் சுடர் தெறித்து விழுகிறது. அந்த சுடர் வெறும் முண்டமாக இருப்பதைக் கண்ட பார்வதி பயந்து தன் கணவனிடம் கூறுகிறாள். சிவன் அந்த முண்டத்தினைத் தலையுள்ள குழந்தையாக உருவாக்குகிறான்.

அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை இரவில் சுடலைக்கு சென்று பிணங்களைத் தின்கிறது. அதைக் கண்ட பார்வதியும் சிவனும், அந்தக் குழந்தையை பூமிக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை சுடலையிலேயே தங்கி பிணங்களை தின்று வளர்கிறது. வாலிபம் அடைந்ததும், சுடலைக்கு பெண் தேவைப்படுகிறாள். பூலோகத்தில் இருக்கும் பெண்கள் யாரும் வேண்டாமென சிவனிடம் சென்று தனக்கு ஒரு பெண்துணை வேண்டுமென கேட்கின்றான். சிவனும் இசைந்து சுடலைமாடத்தியை உருவாக்கி கொடுக்கிறான்.

சிவன், சுடலை மாடனின் வெறியைத் தணிக்க இருவருக்கும் கொடை கொடுக்கின்றனர். அந்த விழாவில் இந்திராணியின் நடனம் நடைபெறுகிறது. சுடலை மாடன் ரத்தபலியும், மகுடச் சத்தமும் கேட்கிறான். இந்திராணியின் காற்சிலம்பின் பரல் தெறித்து விழ கணியான் பிறக்கிறான்.

சுடலை மாடனுக்காக மகுடம் வாசித்து, ஆடி, நரபலிக்கு பதிலாக நாக்கை வெட்டி ரத்தம் கொடுக்கிறான். பின்னர் சுடலைமாடன் , சுடலைமாடத்தியோடு பல வழிகளைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைகிறான்.

அங்கு இருக்கும் பகவதியிடம் தன் நிலையை விளக்கத் தனது காவலுக்கு அவனை வைத்துக் கொள்கிறாள் பகவதி. சில நாள்கள் கழித்து மலையாள தேசம் செல்ல விருப்பம் தெரிவிக்கிறான் சுடலை. மலையாளத்தில் உள்ள மாந்திரீகத் தன்மைகளை விளக்கி, ”அங்கு செல்வது ஆபத்து. எனவே நீ போகக் கூடாது” என்று தடுக்கிறாள் பகவதி. அதை மறுத்த சுடலை, ஆண்டிக்கோலத்தில் காளிப்புலையன், அவன் மகள் மாஇசக்கி வருகிற ஊருக்குச் செல்கிறான். அந்த ஊருக்கு வந்து சுடலைப் பாம்புகளை ஆட்டி வைத்து வேடிக்கை காட்டுகிறான். மாஇசக்கி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே, பிச்சைக்காரனாக வேடம் ஏற்று வீடுவீடாகச் சென்று பிச்சை கேட்கிறான். மாஇசக்கி வீட்டிற்குச் சென்று, தான் அவளைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்கிறான்.

மாஇசக்கியைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்ற சுடலைமாடன் அன்றிரவு பல்லியின் வடிவில் அவளைக் கற்பழிக்கிறான். அதைத் தன் தந்தையிடம் முறையிடுகிறாள் மாஇசக்கி. அவள் தந்தை காளிப்புலையன் மை போட்டுப் பார்க்கிறான். ஆனால், அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுடலை இதை பகவதியிடம் கூறுகிறான். பின்னர் பகவதி அவனை மன்னித்துக் காவலைத் தொடரும்படி சொல்கிறாள்.

காக்காச்சி மலையில் நான்கு பளியர்கள் பயிரிட்டு வருகின்றனர். புழுவாக வடிவம் கொண்டு சுடலை, அப் பயிர்களை அழிக்கிறான். காளிப்புலையன் மீண்டும் மை போட்டுப் பார்க்கிறான். இதற்கெல்லாம் காரணம் சுடலைமாடன்தான் என்பதை அறிகிறான். மாடன் கோபம் கொண்டதாலேயே இப்படியான அழிவுச் செயல்களைச் செய்கிறான் என்று உணர்ந்து மாடனுக்குக் கொடைவிழா எடுக்க முன் வருகின்றனர்.மாடன் காளிப்புலையனின் மகள் சூலியை பலி கேட்கிறான். காளிப்புலையன் முதலில் மறுத்தாலும் பின்னர் அவளை சுடலைமாடனுக்குப் பலி கொடுக்கிறான். பின்னர் ஒரு யானையைப் பலியாகக் கேட்கிறான் சுடலை. பட்டத்து யானையைத் திருடிக் கொண்டு வந்து புலையன் பலியிடுகிறான்.

பட்டத்து யானை காணாமல் போகவே அதைக் கொண்டு சென்றவன் காளிப்புலையன் என்பதை அறிந்த மன்னன் அவனைப் பலியிடுகிறான். அந்த பலியையும் சுடலைமாடன் ஏற்றுக் கொள்கிறான். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயிலுக்கு வந்து ஐயனோடு சம்போடைக்குப் போகிறான். அங்கு ஆரிய சாம்பன் மகள் ஓடைக்குக் குளிக்கப் போகிறாள். இதைக் கண்ட மாடன் மீன் வடிவில் ஓடையில் சென்று அந்தப் பெண்ணோடு கூடுகிறான். அவள் உடல் நலம் குன்றவே மாடனுக்குப் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையையும் பெற்றுக் கொள்கிறான்.

அங்கிருந்து கல்லிடைக்குறிச்சிக்குச் செல்கிறான் மாடன். அவ்வூர் அருகில் உள்ள பொன்னிட்டாங்கயத்தில் மீனாகத் துள்ளினான் மாடன். நாடார்கள் மரம் வெட்ட வருகின்றனர். அங்கு மீன் துள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட மரம் வெட்டிகள் அந்த மீனைப் பிடித்து வெட்டி பங்கு வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் பங்கு குறைந்து கொண்டே இருப்பதைக் கண்ட நாடார்கள், ‘இது மாடனுடைய வேலையே’ என்று அஞ்சி ஓடுகின்றனர். அவர்களுள் பலரை பலி எடுத்துக் கொள்கிறான் மாடன். மிஞ்சியவர்கள் பயந்துபோய்ச் சுடலை மாடனுக்குக் கோயில் எழுப்புகின்றனர். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயில் வன்னிமரத்தில் குடியேறுகிறான் சுடலைமாடன்.

திருச்செந்தூர் கோயிலுக்குக் கொடிமரம் செய்வதற்கு ஆசாரிகள் காட்டுக்குப் போகிறார்கள். அப்போது சகுனத் தடைகள் பல ஏற்படுகின்றன. இருப்பினும் மாடன் குடியிருக்கும் வன்னிமரத்தைச் சிலர் வெட்டுகின்றனர். அவர்களைப் பலி கொள்கிறான் மாடன். சிலரை சொரிமுத்தையன் காப்பாற்றுகிறான். பயந்து போன மக்கள் மாடனுக்குத் திருச்செந்தூரில் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையை ஏற்றுக் கொண்ட மாடன் அவர்களுக்குப் பயனளித்து வருகிறான். 

                              பகிர்வில் ர.சடகோபால்.BA 

கருத்துகள் இல்லை: